Saturday, December 19, 2015

அறம் - என் வாசிப்பு


                                                                                                                          
 ஜெயமோகன் அவர்கள்  40 நாட்களில் எழுதிய  அறம்  என்ற   பன்னிரண்டு சிறுகதைகள்  கொண்ட தொகுப்பு. அறத்தை மையமாக கொண்டு அவர் சந்தித்த மனிதர்களும் அவர்கள் கொண்டிருந்த அறத்தையும் குறித்து எழுத  பட்ட சிறுகதை,இதை சிறுகதை என்று  பார்ப்பதைவிட இது   நமக்கு தெரியாத பெரும்   மனிதர்களின் சிறு வாழ்க்கை  குறிப்பு ,இத்தகைய  மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று உணரும் பொது நான் என் வாழ்கை எவ்வளவு தாழ்வாக எண்ணங்கள் உடன் பயணிக்கிறேன்  என்று உணர தோன்றுகிறது.இன்னும் என்  மனம் அடைய வேண்டிய தூரம் பல பிரபஞ்சங்களை பயண படவேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தும் தொகுப்பு இது, இதில் எனக்கு எந்த சிறுகதை மிக பிடித்தது என்று கூரமுடியவில்லை.ஒவ்வொரு சிறுகதையிலும் எனக்கு பிடித்த வரிகளை இங்கு தொகுத்து உள்ளேன்.

யானை டாக்டர்
Dr  கே என்று அழைக்க பட்ட Dr  கிருஷ்ணமுர்த்தி  யானை டாக்டர் என்று பிரியமாக மக்களால் அழைக்கப்பட்டார்.அவரை பற்றி ஒரு வன அதிகாரிக்கும் அவருக்கும் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய கதை.Dr  கே உலக பிரசத்தி பெற்ற யானை மருத்துவர். இவருடைய ஆய்வு அறிக்கையின் படி  ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டு தமிழக அரசு நடத்தும்  கோவில் யானைகளுக்கான  நிவாரண முகாம்.யானைக்கு பிரேத பரிசோதனை அறிமுகம் படுத்தியவர். யானைக்கு பல  அறுவை சிகிச்சை முறைகளை அறிமுக படுத்தியவர்.


புழுக்களையும் அவர் வர்ணிக்கும் முறை

"புழுக்களை பாத்தாலே நமக்கு பயம்.அந்த பயம் எதுக்குன்னு கவனிச்சா அத தாண்டி போயிடலாம்.புழுக்கள் குழந்தைகள் போல அதனால் தவழ மட்டும் முடியும்,அவை தான் பூச்சிகளாக பின்பு மாரி பறக்கின்றன என்று குறிப்புயிடுகிறார்."

யானை சில புத்திசாலி தனங்கள்  அவர் குறிப்பிடுகிறார் ஆள் யானை மேல் ஏறியதும் தன் உயரத்துடன் அந்த மனிதனின்  உயரத்தையும் கணக்கில் கொண்டு காட்டின் வழி செல்லும்.

அந்த வன அதிகாரி தன்  டில்லியில் உள்ள நண்பனின் முயற்சியுடன் Dr கே அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் கிடைக்க முயற்சிக்கிறார்.ஆனால் அரசியல் காரணங்களால் அவருக்கு கிடைக்காமல் போகிறது.அதை அறிந்து அவன் மனம் வருந்தும் பொழுது Dr கே அவர்கள் கூறும் வார்த்தை

"அந்தா நிக்கிரானெ செல்வா(யானை)..அவனை மாதிரி ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியுமாய்யா? அந்த நிமிர்வும் அந்தக் கருணையும், அற்பத்தனமே இல்லாத அந்தக் கடல் மாதிரி மனசும்...அதை அறிஞ்சா அப்றம் எந்த மனுஷன் உனக்கு ஒரு பொருட்டா இருக்க போறான்? பிரதமர?ஜனாதிபதியா ? அந்த யானைக்கு உன்ன தெரியும்கிறதப் பெரிய நெனைச்செனா டெல்லியிலே எவனோ நாலு கேனையனுங்க எதையோ காயிதத்திலே எழுதிக்  கையிலே குடுக்கறதப் பெரிசா நெனைப்பியா ?
...
Man, vain insect!!!  என்ற பைரனின் கவிதை வார்த்தையை இவர் அப்பொழுதும் கொடிட்டு காட்டுவார். மிருகங்களின் உயர்ந்த சில பண்புகள் முன் மனிதன் எவ்வளவு  சாதாரண வாழ்க்கை வாழ்கிறான் என்று உணர்த்தும்  வரி.

அவருடைய கோபத்தின் பதில்லுக்கு அவன் தன்னுடைய நிலைமையை அவருக்கு விளக்கும் வரி ...

"ஆனா இங்க வந்து தற்செயலா உங்களை சந்திக்கிற வரைக்கும் தெரியலே டாக்டர் .நான் பள்ளிக்கூடத்திலயும் காலேஜிலேயும் இதையெல்லாம் படிக்கலேயே.எனக்கும் எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி , பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே?என்னைப் பாருங்க பிளஸ் டூ வரை மார்க் வங்கி ஜெயிச்சு அமெரிக்க போய் சம்பாதிச்சவங்க மட்டும் தான்  வாழ்க்கையில ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு ... என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளிய வளர்ந்திட்டு வராங்க சார்.இலட்சியமே இல்லாத தலைமுறை.தியாகம்னா என்னானு தெரியாத தலைமுறை.மகத்தான சந்தோஷங்களை இந்த மண்ணிலே இருக்குங்கிறதே தெரியாத தலைமுறை"

ஒலைச்சிலுவை

Dr  சொமெர்வெல்ல் ( Dr Theodore Howard  Somervell ) அவர்கள் இங்கிலாந்தில் இருந்து வந்து நெய்யூரில் உள்ள மருத்துவமனையில் சேவை புரிந்தவரின் கதை.அவரிடம் வந்து சேரும் கிழ் சாதியினரின் குடும்பத்தில் வந்து சேரும் மாணவனுக்கும் அவருக்கும் உள்ள உறவின் கதை.மிஸ்ஸினரி பள்ளியில் சேர்ந்து கிறிஸ்தவனாக மத மாற்றம் மாகி தன் குடும்பத்தை உயர்த்துபவன் மற்றும் சோற்றுக்காக தான் மதம் மாறினவன், Dr அவர்களின் தொண்டினாலும் அவரும் தீராத ஏசுவின் அன்பினாலும் உண்மையான ஏசுவின் பக்தானாக மாறுவான்.

இதில்  அவருடைய ராணுவ மருத்துவ சேவையில் நடந்த உண்மை சம்பவதை அவர் கூறுவது.
பிரான்ஸ்ல் சோம்பே  என்ற  ஊரில்  700 பேர்க்கு  மேல் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுது,யாரும் அழவில்லை ,கெஞ்சவில்லை , என்னை தான்  வந்து முதலில் பார்க்க  வேண்டும் என்று அழவில்லை., வரிசையாக  வரும் வரை காத்திருந்தனர், நான்கே மருத்துவர்கள் இரவெல்லாம்  அந்த விரர்கள்ளுக்கு மருத்துவம் பார்த்தனர்,சொமேர்வெல் சோர்வுற்று ஒரு  கட்டிலில் அமரந்து பொழுது,அடுத்த படுக்கையில் இருந்த இன்னொரு வீரனுக்கு கால்களில் அடிபட்டு உண்மையாகவே ரத்தம் வடிந்து ஓடுகிறது, அப்பொழுது மருத்துவர் எழுந்து செல்ல முயன்ற பொழுது அவரை சற்று  ஒய்வு எடுத்து வரும் படி  சைகை காட்டினர் இராணுவ வீரர். எப்பேர் பட்ட மனிதர்கள்!

ஒலைச்சிலுவை கதையில் ஒரு காட்சி  மருத்துவர்  உன் கணவர் இறந்து விடுவார் என்று கூறும்பொழுது  அவள் பேசுவது

"சரி அதாக்கும் விதிண்ணா அப்படி நடக்கட்டு.செத்தா இங்க வல்ல எடத்திலயும் குழிச்சு போடுங்க சாயிப்பே .வல்ல தேங்க்கோ வாழைக்கோ  உரமாப் போவட்டும்.சிவிச்ச்நாளு முழுக்க மனசறிஞ்சு ஒரு வாயிக் கஞ்சி குடிச்சாத மனுஷன்னாகுமே... கிட்டிந்தெல்லாம்  பிள்ளைகளுக்கு பிள்ளைக்கள்ளுகுன்னு  கொண்டு வந்து குடுத்தவனாக்குமே...இனி  அவனுக்க ரெத்தமும் சதையும் எல்லாம் வேரு உறிஞ்சி தின்னிட்டு ...அவள் தொண்டை அடைத்தது ...'அவனை தின்னு வளர்ந்து வாற மரமெல்லாம் நல்லா காய்க்கும் சாய்ப்பே ..."

நூறு நாற்காலிகள்
நாயாடி  என்பது  குறவர்  உட்பிரிவை   சேர்ந்த  கீழ் சாதியாக பார்க்கப்பட்ட ஒரு பிச்சைக்காரியாக திரியும் ஒரு தாயின் மகனாக பிறந்து  முதல் IAS அதிகாரி ஆவார். அவர் அலுவலகத்தில் உயர் சாதியினால் அவர் நடத்தப்படும் நிலைமையும் அவருக்கும் அவர் தாயுக்கும் உள்ள உறவின் பிரிச்சனைகளை விளக்கும்  கதை.

சுதந்திரம் கிடைத்து அறுபத்தி  ஆறு வருடங்கள் கழித்தும் விஷ்ணுப்ரியா என்ற காவல் துறை அதிகாரி உயர் சாதி  அதிகாரிகளின் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என அவர் குடும்பமும்,நண்பரும் கூறுகின்றனர், இன்றும் தலித் மக்கள் அரசு அலுவலகங்களில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீரவில்லை என்று உறதி படுத்த படுகிறது.

"நாயாடிகள்  அலைந்து  திரியும் குறவர்களில் ஒரு பிரிவு.இவர்களை பார்த்தாலே தீட்டு என்ற நம்பிக்கை இருந்தமையால்  இவர்கள் பகலில் நடமாட முடியாது .இவர்கள்  நேரில் பார்த்துவிட்டால் உடனே சத்தம் போட்டு  சூழ்ந்துகொண்டு கல்லால் அடித்துக் கொன்று அங்கேயே எரித்துவிடும் வழக்கம் இருந்தது . ஆகவே இவர்கள் பகல் முழுக்க காட்டுக்குள் புதர்களுக்குள் குழி பறித்து அதற்குள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் பன்றிகள்போல ஓடிங்கிக்கொண்டு தூங்குவார்கள் "

சிவில் சர்வீஸ்  நேர்முக  தேர்வில்  ஒரு ஊகக்  கேள்வி 

"நீங்கள் அதிகாரியாக இருக்கும் வட்டத்தில் நீங்கள்  தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி ஒருபக்கம் நியாயம் இருக்கிறது .இன்னொருபக்கம் உங்கள் சாதியினர் இருக்கிறார்கள்.என்ன முடிவெடுப்பிர்கள் ?"

"திடமான குரலில் 'சார் ,நியாயம் என்றால் என்ன?'என்றேன் .'வெறும் சட்டவிதியும் சம்பிரதாயங்களுமா  நியாயத்தைத் தீர்மானிப்பது?நியாயம் என்றால் அதன் அடிப்படையில் ஒரு விழுமியம் (values ) இருந்தாகவேண்டும் அல்லவா ? சமத்துவம்தான் விழுமியங்களில் மகத்தானது,புனிதமானது. ஒரு நாயாடியையும் இன்னொரு மானுட உயிரையும் இருப்பக்கங்களில் நிறுத்தினால் சமத்துவம் என்ற தர்மத்தின் அடிப்படையில் அப்போதே நாயாடி மாபெரும் அநீதி இழைக்கபட்டவன் ஆகிவிடுகிறான்.அவன் என்ன செய்தாலும் அது நியாயப்படுத்தபடுகிறது."

பெருவலி 
தமிழ் நாடகம் மற்றும் சினிமா இயக்குனர் கோமல் சுவாமிநாதன் , அவருடைய  குறிப்பட கூடிய தண்ணிர்  தண்ணிர்  நாடகத்தை கே  பாலச்சந்தர் படமாக எடுத்தத்தார் .கோமல் சுவாமிநாதன் அவரின் முதுகுதண்டு புற்றுநோயால் பாதிக்க பட்டு தன்னுடைய முதுகு வலியுடன் அவர் இமயமலைக்கு நடந்தே சென்று  வந்த அனுபவத்தை திரு ஜெயமோகன் அவர்களுடன் பகிர்ந்து கொண்ட அனுபவம்,  அவர் பெருவலியை  ஏற்றுக்கொண்ட விதமும் அந்த வலியை  அவர் விவரிக்கும்  விதமும் மனம் வருந்த செய்கிறது.

"ஆனா இது என்னோட வலி.என் உடம்பில் இருந்து வந்தது.அப்ப எனக்கு அதுமேலே ஒரு பிரியம் வர தானே செய்யும்.சனியன் இருந்திட்டு போறது .வளத்து ஆளாக்கிருவோம் ,என்ன?"

...
"வளந்துட்டா ..இப்ப அவளுக்கு தனிய அஜெண்டா இருக்கு.எங்கேயோ போகணும் என்று துடிக்கறா..என்னையும் கூட்டிண்டுதான் போவான்னு நினிக்கிறேன் என்றார்"

மௌனி  கூரியது  - அகத்தின் வெளிவிளக்கம்தானே  வெளியே 

மனுஷன் உட்பட எல்லா ஜீவனுக்கும் இயற்கை கொடுத்திருக்கிறது தனிமை தானே?மத்த எல்லாம் நாம குளிருக்குப் போத்திக்கிறது.கையில கிடைத்த எல்லாத்தையும் எடுத்து  மேலே போட்டுக்கறோம். பொண்டாட்டி , புள்ளைங்க, நண்பர்கள், கட்சி , கழகம், கலை இலக்கியம் ..எல்லாமே "

கோமல் இமையமலைக்கு போகபோகிறேன் என்று கூறிய  பொழுது,முதுகு வலியுடன் எப்படி போக போவிர்கள் என்று கேட்ட பொழுது அவர் கூறியது

"வலிக்கும்தான்,ஆனா முதுகெலும்பு ஒண்ணும் ஒடன்சுபோயிடாது இல்ல? பாப்போம். எப்படியும் ஒரு ஒண்ணர லட்சம் காலடி எடுத்து வைக்கனும்னு நினைக்கிறேன்.அப்ப காலெடுத்து வைக்கரப்ப ஒருவாட்டி, திரும்ப எடுக்கறப்ப ஒருவாட்டின்னு மொத்தம் மூணு லட்சம் வாட்டி சுத்தியால அடிக்கிறது மாதிரி.முனு லட்சம் நாமாவளி சொல்றேன்னு வச்சுகொங்கோ .எதுவானாலும் ஒரு கணக்கு வச்சுட்டோம்னா ஒருமாதிரி ஒரு நிம்மதி வந்தறது.. இவ்வளவுதானேன்னு தோணிடறது."


திரை துறையில்  பல கிழ்மைகளை  கண்டவர் , அத்தகைய ஒன்று  ஒரு பன்னிரண்டு வயது பெண்ணை எட்டு ஆண்கள், அதுவும் பெண்களை பெற்ற அப்பாக்கள்  இரவெல்லாம் கற்பழித்து அவள் தாய் கைத்தாங்களாக அழைத்து சென்றதை பார்த்தவர் , அந்த  கீழ்மையுடன் தான் வாழ்ந்தும் தனக்கு இமயமலைக்கு வந்த வாய்ப்பை கூறும்பொழுது

"கபோதி , உனக்கெதுக்குடா முதுகெலும்பு ? நீ  நின்னு எறிஞ்சிருக்க வேண்டிய எடங்களிள்ள எல்லாம் குளுந்து கல்லா நின்ன கோழை தானேடா ? அன்னிக்கு உன் வாயில எழுந்த சாபத்தையெல்லாம் துப்பாம உள்ளுக்குள்ள சேத்து வச்சிட்டே. எல்லாம் படிஞ்சு உன் முதுகெலும்பு உளுத்துப்போச்சு.உப்புப் பட்ட 
இரும்பு மாதிரி துருப்பிடிச்சு தொங்கி போச்சு.இந்தோ, என் முதுகெலும்பு ஒண்ணை ஒண்ணு கவ்விண்டுருக்கிற நூறு  தேளு மாதிரி இருக்கு.நூறு கொடுக்கு.நூறு வெஷம்...என் மேலேயா தூக்கி வெச்சிருக்கே இந்தப் பொற்கிரீடத்த? வெலையாடுறியா ? கேலி பண்றியா ? நான் பட்ட சிருமைக்குமேலே சிறுமைப்பட்டு, கூசி, புழுவா மலமா இங்க நிக்கணும்னு நெனைக்கிறிய?"

சோற்றுகணக்கு
இன்று ஹோட்டல்கள் உணவு பரிமாருவதை ஒரு திருட்டு தொழிலாக மாறிவிட்ட காலகட்டத்தில், அறுபதுகளில் கேத்தேல் சாகிப் திருவனந்தபுரத்தில் சோற்றுகடையில் நடத்திவந்தார்.அங்கு சுவையான அசைவ உணவு பரிமாறப்படும் அங்கு உணவு உண்டுவிட்டு அங்கு திரைமறைவில் தகர டப்பா உண்டியில் விருப்படுபவர்  காசு போடலாம்.

அங்கு ஏழ்மை காரணமாக படிக்க வந்த மாணவன் ஐந்து வருடங்கள் காசு போடாமல், நான் ஏன் தனக்கு உணவளிக்கும் தாயிக்கு  காசு கொடுக்க வேண்டும் என்று உணவு உண்டுவிட்டு செல்வார் , கேத்தேல் சாகிப் எந்த ஒரு செய்கையில் மாற்றும்  காமிக்காமல்  சில முறை காசு போடும் போழுது எப்படி கவனித்து உணவு பரிமாரினாரோ அப்படியே 5 வருடங்களும் பரிமாறினார்.அவர் ஒரு ஜின்னாக  தான் (ஜின் -குரானில் குறப்படும்  மந்திர சக்தி படைத்த பூதம் )   அவரை பசியால் அங்கு வந்த ஏழை  மாணவர்கள் கண்டனர்.பின்பு படித்து முடித்து தன்னுடைய வேலையிடத்தில் சிட்டு போட்டு சுமார் 15,000 ருபாய் அது அந்த காலத்தில் திருவனந்தபுரம் புறநகரில் ஒரு வீடு வாங்க கூடிய அள்ளவு பணத்தை அவர் உண்டியிலில் போடுவார்.அனால் அன்றும் கேத்தேல் சாகிப்  அவரை முன்பு எப்படி நடத்தினரோ அதே போலே ஒரு துளி மாற்றம் இல்லாமல் நடத்தினார்.

அறம்
இந்த சிறுகதை தொகுப்பு அறம் என்ற முதல் சிறுகதை எழுத ஆரம்பித்து பிறகு மற்ற சிறுகதைகளை ஆசிரியர் எழுதினார். அறத்தின் மிது அவருக்கு சந்தேகம் வந்தபொழுது அதற்கு விடை தேட முயன்ற பொழுது எழுதிய கதைகள் தான் இவை.
திரு ஜெயமோகன் அவர்கள்  சந்தித்த எழுத்தாளரின் அனுபவம் தான் இந்த கதை. ஒரு களத்தில் தரி தொழில் செய்து நன்கு வாழ்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் திடீர் என இயந்திரங்களின் வருகையால் தொழில் நொடிந்து குடும்பம் நடுதெருவுக்கு வருகிறது. அப்பொழுது சுவாமிநாதன் என்ற நண்பர் முலம் மெய்யப்ப செட்டியாரிடம்  குறைந்த பணத்திற்கு புத்தகம் எழுதும் வேலை கிடைக்கிறது. அதை பற்றி குறிப்பிடும் பொழுது

"அப்பதான் எழுத ஆரம்பித்தது.எல்லாம் எழுத்துதானே?தெரிஞ்சது அது ஒண்ணுதான்.பொண்ணா பொறந்திருந்தா தாசித்தொழில் செஞ்சிருப்பேன்.எழுத்தாளான பொறந்ததனாலே இது..."  
...

தன்  பெண்ணின் திருமணத்திருக்காக  நூறு புத்தகங்களை ஒரு வருடத்தில் எழுத ஒப்புக்கொண்டு ஒரு புத்தகத்திற்கு ஐம்பது ரூபாய் விதம் ஐயாயிரம் ரூபாயிக்கு எழுத ஒப்புக்கொண்டு முடித்து கொடுத்தார் .சில்லரையாக  செலவுக்கு வாங்கினது போக சுமார் மூவாயிரம் பணம் தன மகள் திருமணத்திற்கு கேட்கும் பொழுது செட்டியார் பணம் எதுவும் தர வேண்டியது இல்லை ஏன திட்டி அனுப்பிவிடுகிறார்.எவ்வளவு கெஞ்சியும் தராமல் துரத்திவிடுகிறார். எழுத்தாளர் என்ன செய்வது என்று தெரியாமல் கோபம் கொண்டு நேராக செட்டியார் விட்டுக்கு சென்று கோவத்துடன் அவருடைய மனைவி ஆச்சியிடம்

"நான் சரஸ்வதி கடாட்சம் உள்ளவன்'ன்னு  சொன்னப்ப அப்படியே சன்னதம் வந்திடுத்து.என் குரல் மேலே போயிடுத்து.அதுக்கு மேலே நான் செஞ்சதெல்லாம் எப்டி செஞ்சேன்னு எனக்கு ஆச்சரியம் தான் 'என் வயசுல அடிச்சா நீயும் உன் பிள்ளைகுட்டிகளும் வாழ்ந்திடுமா? வாழ்ந்தா சரஸ்வதி ஒரு தேவிடியான்னு அர்த்தம்' னு சொல்லிட்டே சட்டுன்னு ஒரு பேனாவை எடுத்து ஒரு வெண்பாவை எழுதி அவ தட்டிலே இருந்த இட்லிய எடுத்து பூசி வீட்டுக் கதுவுல ஓட்டிட்டு வந்திட்டேன் "

....
"அது என்ன வெண்பா? என்றேன் .நான் ஊகித்திருந்தேன் 'அறம் தான் ..அப்டி ஒரு வழக்கம் இருக்கே .சத்தியம் அதைப்பத்தி  எங்கேயோ கேட்டதோட சரி ....
..பாட்டு  நினைவில இல்ல .அதை மறக்கண்ணும்னு  தான் இருபத்தியைந்து வருஷமா முயற்சி  செய்யிறேன் .அனாலும் கடைசி இரண்டு வரியும் ஞாபகத்துல  இருக்கு . 'செட்டி குலமறுத்து  செம்மண்ணின் மேடாக்கி  எட்டி எழுகவேன்றறம் '."

அதை கேட்டு உடனே ஆச்சி  கடை வாசலுக்கு உடனே சென்று நடு தெருவில் அங்க கோபம் கொண்ட அம்மனை போல நடுத்  தெருவில்  இப்பொழுதே பணத்தை திருப்பி கொடு என்று உட்கார்ந்துவிட்டாள்.செட்டியார் ஓடி மூவாயிரம் பணத்தை திரட்டி எழுத்தாளரின்  மனைவியிடம் கொடுத்துவிட்டு நேராக தன்  மனைவியிடம் பணத்தை கொடுத்துவிட்டேன் என கூரி விட்டுக்கு அழைத்து சென்றார். மகளின் திருமணம் நன்றாக முடிந்தது செட்டியாரரும் திருமணத்திற்கு  வந்து தங்க நாணயம் பரிசாக தந்தார் . பின்பு ஒரு நாள்  ஆச்சி அவர்கள் விட்டிற்கு அழைத்து

"புலவரே  உங்க வாயாலே  என் குலத்த வாழ்த்தி ஒரு பாட்டு பாடிட்டு போகணும் .என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிக்கணும் ....
..நாடாளறதுக்குக் தான் தர்மம்னு எவன் சொன்னான் ?தர்மம் இருக்கிறது வீட்டிலே அய்யா .தர்மபத்தினின்னு சும்மாவா சொன்னங்க.சட்டுன்னு வெண்பா வந்துட்டுது ....
என்ன ஆச்சரியம்ன்னா  அந்த வெண்பாவில் முதல் ரெண்டு வரி மட்டும்தான் ஞாபகமிருக்கு. 'மெட்டி ஒளிசிதற மெய்யெல்லாம் பொன்விரியச்  செட்டி குலவிளக்கு செய்தவம்' ....

அவங்க கையாள சோற்றை பொட்டு தட்சணையாக முன்று தங்க காசுகளுடன் ஐநூறு ரூபாய் பணத்துடன் தட்டில் வேத்து  தட்சணையாக கொடுத்தார்.

"அன்னிக்குப்  படி எரங்கினவன் அதுக்கு முன்னாடி இருந்த நான் இல்ல .செத்துப்  பொழைச்சேன் .அப்ப தெரிஞ்சது சொல்லுன்னா என்னான்னு .அது அர்ச்சுனன் வில்லு.எடுக்கிறப்ப ஒண்ணு தொடுக்குறப்ப  நூறு .படுறப்ப ஆயிரம் ..
அறம்னு  சும்மாவா  சொன்னங்க ..'என்றார் அவர். 'அறம் கூற்று  ஆகும்னுல்ல இளங்கோவும்  சொல்றான் ' ... 'ஆமா அறம்  தான் .ஆனா  அது  அவகிட்டல்ல  இருந்தது ...'"

வணங்கான் 
சாதி கொடுமைகளை  எதிர்த்து போராடி மார்ஷல் நேசமணி அவர்களின்  வழிக்காட்டுதலின்  படி அந்த தடைகளை மீறி வந்த கருப்பன் நாடார் அவர்களின்  வாழ்க்கை குறிப்பை அவருடைய மகன் தனக்கு வணங்கான் நாடார்  என்ற  பெயர் ஏன் வந்தது என்று கூரும் கதை.

சிறு வயதில் தன்னையும் தன்  தந்தையை ஒரு உயர் சாதி நாயர்களால் கொடுமை படுத்துவதை ஏற்க முடியாமல் நட்டாலில்  இருந்து  நாகர்கோயில் வரை சுமார் முப்பது கிலோமிட்டர் நடந்து காட்டின் வழியாக தப்பித்து சென்றார்.விட்டை விட்டு வந்து நாகர்கோவிலில் இட்லி கடையில் வேலை செய்து அங்கு மீந்ததை தின்று வளர்கிறார்.அங்கு வேலைக்கு நடுவில் தானாக எழுத படிக்க கற்றுகொள்கிறார். பின்பு நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டீ கடையில் வேலை செய்யும் பொழுது அங்கு வரும் ஆசிரியர் அவனுக்கு புத்தகங்களை கொடுத்து படிக்க வைக்கிறார்.
அங்கு அவர் தான் குருவானான மார்ஷல் நேசமணி அவர்களை தன் கடைக்கு வந்து டீ அருந்தும் பொழுது சந்திக்கிறார்.

மார்ஷல் நேசமணி  கன்னியாகுமரி மாவட்டம்  தமிழகத்துடன்  இனைய போராடியவர். சுதந்திர  போராட்ட வீரர் . வக்கிலுக்கு படித்து நாகர்கோவில்  உயர்நீதி மன்றத்தில்  பணியாற்றினார் . அங்கு இருந்த சாதி  வேற்றுமைக்கு எதிராக போராடினார் . உயர்சாதி வழக்கறிஞ்சர்கள்  அவர்களுக்கு  நாற்காலியும்  மற்ற சாதியினர்களுக்கு  குந்துமனை (stool ) வைத்ததை முதல்  நாளே  எட்டு உதைத்து  நாற்காலியில் உட்கார்ந்தார் . தண்ணிர் குடிக்க  தனியாக வைத்திருந்த பானையை உடைத்தார். தான்  காலமாகும் வரை கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினராக  இருந்தார்.

 பின்பு ஆசிரியர்  அவர்களின்  வழிகாட்டுதலின் பேரில் திருநெல்வேலி மாவட்டத்தில் நில அளவை துறையில் வேலை கிடைத்தது. தென்காசியில்  நில அளவையின் மைய அலுவலகம் இருந்தது  அவர் இலஞ்சி கிராமத்தில் வேலைக்கு அனுமதிக்க பட்டார். அங்கு தலையாரி சங்கர்த்தேவர் துணையுடன் அலுவலகத்தை திறந்து  தானே சுத்த படுத்தி தன் வேலையை துவங்கினார் .இலஞ்சி கிராமம் இஞ்சிக்குடி ஜமின்னுக்கு சொந்தமாக இருந்தது.அங்கு எந்த  சட்ட திட்டமும் செல்லுபடி  ஆகவில்லை. ஜமிந்தார் பெரியகருப்பு தேவர் இட்டதே சட்டமாக இருந்தது.  நிலங்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.முதல் நாள் ஜமிந்தார் அலுவலகம் சென்ற பொழுது சட்டை  தலைபாகை கழட்டி வைக்க பட்டு  அசிங்கபடுத்தபட்டார்.
பின்பு அலுவலகம் வந்து ஜமினின் தவறுகளை சுட்டி காட்டி அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.சங்கரத்தேவர் ஜமின்தார் அழைக்கிறார் என்று கூறிய பொழுதும் ஜமின்தார் அலுவலகம் செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. சூரியன் அஸ்தமனம் ஆகாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யதின் வேலைக்காரன் நான் அதன் வலிமை  எவ்வளவு என்று பார்க்கிறேன் என்று  ஜமினை  எதிர்த்து சவால் விட்டார்,பின்பு தலையாரி துணையுடன் அலுவலகத்திலே தங்கி வேலைசெய்தார். சங்கர்த்தேவர் அலுவலக  கடிதங்களும்,அவருக்கு தேவையான சாமான்களும் வேல்கம்பு தாங்கி வாங்கிவந்தார். இரவில் தொடர்ந்தது கொலை மிரட்டல் வரவே  நேசமணிக்கு கடிதம் எழுதினார்.அவர் தென்காசியில் இருந்து எழுபது எண்பது  வேல் கம்பு வீரர்களுடன் யானை மேல் இலஞ்சிக்கு வந்தார். அப்படியே கருப்பன் நாடார் அவர்களை யானை மேல் உட்கார  வெய்த்து ஜமீன் விட்டுக்கு அழைத்து சென்றார்.அங்கு அரை மணி நேரம் கூட்டம்ஆர்பரித்தது. காங்கிரசுக்கு ஜே ! மாகாத்மாகாந்திக்கு ஜே! பண்டிட்டு நேஹ்ருவுக்கு ஜே! சுபாஷ் சந்திரபோசுக்கு ஜே! என்று நேசமணி ராஜாவுக்கு ஜே !. பின்பு 7 வருடங்கள் அங்கேயே வேலை செயித்து ஜமீன் மிது நடவடிக்கை எடுத்தார்.
தன்னுடைய முப்பதிமுன்றாம் வயதில் திருமணம் முடிந்து தன்னுடைய எழு மாத  குழந்தையுடன் பிள்ளியாடி பெருவட்டரின் மகனான நேசமணி விட்டிற்கு சென்றார்  அவர் என்னவாகும் பேரு? என்று கேட்ட பொழுது  வணங்கான் என்று சொன்னார் .நேசமணி புன்னகை புரிந்தார்.

மத்தறு தயிர்
ஒரு பேராசிரியருக்கும் வழி தவறி செல்லும் மாணவனுக்கும் உள்ள உறவை ஜெயமோகன் அவர்கள் நண்பரும்  பேராசிரியரின்  மாணவன் குமாருடன் ஏற்படும் சம்பவங்கள் தான் கதை.இந்த கதையில் பேராசிரியரின் குரு குமாரபிள்ளை தன்னை சிஷ்யனாக ஏற்று வழி காட்டியதையும் நினவு கூறுகிறார்.

பேராசிரியரை ஒரு விழாவுக்கு அழைத்து செல்லும் பொது ஜெயமோகனும்  கம்பன் பாடலை பேராசிரியரிடம் விளக்கம் கேட்கிறார்

 கம்பன் இராமன் சிதையின் பிரிவை பற்றிய பாடல்

மத்தறு தயிர் என வந்து சென்ற இடை 
தத்துறும் உயிரோடு புலன்கள் தள்ளுறும் 
பத்து ,நின் பிரிவினில் பிறந்த வேதனை 
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ ?


உடல் தயிர் கலயம் போன்றது, அதில் தயிர் உயிர் போன்றது. மத்து முன்னும் பின்னும் சுற்றி கடைவது போன்று சீதையின் பிரிவு ராமனை துன்பம் என்னும் மத்து அவனை படுத்துகிறது. அவள் பிரிவால் எத்தனை வேதனை அந்த வேதனையை கணக்கிட முடியுமோ?

இதை நான் மிக சுருக்கி விளக்கம் அளித்துள்ளேன் இதன் விளக்கத்தை பேராசிரியர் கூரியத்தை  படிக்கும் பொழுது என் மனம் உண்மையாக இராமனின் பிரிவை உணர செய்தது.கம்பன் இப்போழுது கம்பராமாயணம் எழுதி இருந்தால் அவனுக்கு இலக்கியத்திற்கு நோபெல் பரிசு கிடைத்திருக்கும் என்று என்  தமிழ் ஆசிரியர் கூரியது ஞாபகம் வருகிறது.அப்பொழுது மதிப்பெணுக்காக படித்தால் இந்த முட்டாளுக்கு புரியவில்லை.

பேராசிரியரின் இந்த பாட்டின் விளக்கத்தின் ஒரு பகுதி

"நின் பிரிவினிற் பிறந்த வேதனை.பிரிவுக்கு இணையான வேதனை உண்டா ? ஏன்னா மனுஷன் தனியாளு இல்ல கேட்டேள்ளா ? ஒவ்வொரு மனுஷனும் இன்னொருத்தர் கூட ஒட்டியிருக்கான்.அவன் இன்னொருத்தர் கூட ஒட்டிருக்கான்.கையும் காலும் வெரலும் உடம்பிலே ஒட்டியிருக்கிற மாதிரி மனுஷன் மானுடத்தோட ஒட்டிருக்கிறான்.பிரிவுங்கிறது அந்தப் பெரிய கடலிலே இருந்து ஒரு துளி தனிச்சிப்போறதாக்கும்.சாவும் பிரிவும் ஒண்ணு.எல்லாப் பிரிவும் ஒரு சாவக்குமே."

அனுமன் சீதையை  அசோகவனத்தில் சந்தித்து  இராமன் பிரிவை கம்பன் கூரும் காட்சி .

ஆவி உண்டு என்னும் ஈது உண்டு, உன் ஆருயிர் 
சேவகன் திருவுரு தீண்ட தீயந்திலா 
பூ இலை தளிர் இலை, பொரிந்து வேந்திலா 
கா இலை,கொடி இலை,நெடிய கான் எலாம்.


இராமனுக்கு உயிர் இருக்கிறது உடலும் இருக்கிறது ஆனால் அவன் வேதனை திண்டியதால்  காயாத  பூ இல்லை, இலை இல்லை அவன் துயரத்தின் நெருப்பில் வேகாத காயும்  இல்லை கொடியும் இல்லை.அந்த காடு முழுவதும்.

ஒரு கலாச்சாரத்தின் உச்சம் அந்த மகாகாவியம் தான்.


கோட்டி
பூமேடை எஸ் ராமையா நாகர்கோவிலில் வாழ்ந்த இந்தியக் சுதந்திர போராட்ட வீரர்,பூமேடை ஒரு தனி நபர் போராளி தன் சொத்துகளை விற்று நாகர்கோவிலில் தொடர்ச்சியாக அதிகார வர்க்கத்தின் ஊழல்,பொறுப்பின்மை கட்சி அரசியலின் கீழ்மைகள் ஆகீயவற்றை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அவரை எல்லாரும் கோமாளியாக தான் அவரை பார்த்தனர்.அவர் நாகர்கோவிலின் மனசாட்சி என்ற எண்ணம் அவர் மறைந்த பின்னரே உருவாகியது. பூமேடை எவராலும் கௌரவிக்கபடாமல்.எவராலும் மதிக்க படாமல் மறைந்தார்.

கோட்டி - குழப்பம் புரிபவனையும் பிரச்சனை பன்னுபவரை குறிக்கும் வட்டார சொல் என எனக்கு கதையை படித்தபின் தோன்றியது.

அவருடைய பரிசார சுவரொட்டி விளம்பர வாக்கியம்

" ' திடீர் கழுத்தறுப்பு விழா' !  அரசன் கைவிட்ட நாடும் வாழும்.தோட்டி(துப்பரவு தொழிலாளர்) கைவிட்ட நாடு நாறும். குட்டித் தம்புரான்களுக்கு எச்சரிக்கை "

இதை படித்த பொழுது நான் என் மனைவியிடம் பல முறை இந்த ஊர்ல டாக்டர்  வேலைக்கு வர்லனாலும் நோய் வந்த தான் அவர் தேவை, ஆனா நம்ப துப்புரவு தொழிலாளர் வரலேனா நமக்கு நோய் வந்துடும் அதனால அவங்க தான் முக்கியமுன்னு சொல்லுவேன்  அது தான் ஞாபகம் வந்தது 


கதையில்  அவரிடம் இப்படி  சொத்தை அழிப்பது பற்றி கேட்கும் போழுது

"அப்பனம்மை சேத்ததத் தின்கிரதுல்லாம் ஒரு பொளைப்பு இல்ல என்றேன்.தம்பி அவுக என்ன உளைச்சா சேத்தாங்க? பாவப்பட்ட புலையனையும் சாம்பானையும் வேலைவாங்கி ஏச்சு சேத்தது தானே ? வெயிலிலே சம்பாரிச்சது மழையிலே போறதுதானே நியாயம்?


உலகம்யாவையும்
  
நான் பல முறை என் வாழ்க்கையில் கடவுச்சிட்டு(பாஸ்போர்ட்) எதற்கு தேவை எந்த பறவையும்,மிருகங்களும்  பூமியின் ஒரு பகுதியிலியுருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல எந்த கடவுச்சிட்டு தேவைப்படவில்லை.சுமார் இரனூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்க பட்டது ஒரு நாடு தான் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் அதை பயன்படுத்தகிறது. அதற்கு முன் மனிதன் உலகம் முழுக்க பயணித்திருக்கிறான்..இந்த நாடு என்ற குறுகிய எண்ணம் தான் இந்த உலகின் பல பிரச்சனைக்கு காரணம் .நாடு விட்டு நாடு வந்து வேலை செய்வதும் ஒரு நாட்டின் பணம் மற்றோரு நாட்டின் மதிப்பை  விட அதிகம் என்ற நிலையும் தான் காரணம்.உலகின் பல நாடுகள் ஏழ்மைக்கு இதுவும் ஒரு காரணம்,காரி  டேவிஸ் (Gary  Davis ) 1948 'ல் தன்னுடைய அமெரிக்க பாஸ்போர்ட்டை துறந்து தன்னை உலகக்குடிமகன் என்று அறிவித்து உலக கடவு அட்டை உருவாக்கினர், அதை கொண்டு உலகம் முழுவதும் சுமார் 60 நாடுகளுக்கு பயணப்பட்டார்.அதனால் பல வருடங்கள் பல நாடுகள் சிறை சென்றுள்ளார்.
 இந்த கதை ஜெயமோகன் அவர்கள் காரி டேவிஸ் அவர்களை ஊட்டியில் உள்ள  நாராயண குரு அவர்களின் மடத்துக்கு செல்லும் வழியில் அவரை சந்தித்து அவரும்  காரி டேவிஸ் மேற்குமலை சென்று அங்கு மலைச்சரிவை பார்க்கசெல்வதும் அந்த பயணத்தில் ஒருஉலகம் என்ற அவருடைய கொள்கை பற்றி நடக்கும் விவாதம்...

ஏன் நீங்கள் சிறைக்கு செல்கிறிர்கள் என்று கேள்விக்கு அவர் பதில்..இந்த உலகத்தில் நம் கருத்துகளை முன் வைக்க இரண்டு வழிகள் உள்ளது.ஒன்று அதிகாரம் முலம்,அரசுகள்,ஊடகங்கள் தமக்கு தேவையான கருத்துகளை அப்படி தான் மக்களிடம் எடுத்து செல்கிறது.ஆனால் அதிகாரம் அற்ற ஓர் தனி மனிதன் நாளைக்கு தேவையான கருத்துகளை எடுத்து செல்ல ஒரே வழி தியாகம் தான்.ஒரு கருத்துக்கு ஒருவன் தன் உடமைகளையும் உயிரையும் ஒட்டுமொத்தமாக தியாகம் செய்ய தயார் என்றால் அந்த கருத்து நம்பமுடியாத வல்லமை வந்துவிடுகிறது. அதுதான் காந்தி வழி.
அத்தகைய வழியில் வந்த உதாரணங்கள் தான் காந்தியவாதி சசிபெருமாள் இன்றும் அந்த வழியைதான் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒருநாள் என் மகன்களை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள phonetics பள்ளிக்கு அழைத்து செல்லும் போழுது ஒருவர் வள்ளுவர் கோட்டம் அருகே தன்தனியாக  ஒரு சிறிய பந்தலில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி கொண்டிருந்தார்.போராட்டம் என்றால் அங்கு துணைக்கு  ஒருவரும் இல்லை அவரை தவிர அவர் மட்டும் மிக மெலிந்து ஒரு சிறிய படுக்கையில்  படுத்துகொண்டிருந்தார். அன்று அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை. பின்பு சசி பெருமாள் அவர்கள் இறந்த செய்தி பத்திரிக்கையில் பார்த்த பொழுது தான் தெரிந்தது  முன்பு நான் பார்த்தது காந்தியவாதி சசிபெருமாள் என்று.அன்று நானும் ஒரு சாதாரண மனிதனாக அவரை அப்படியே பார்த்தும் பார்க்காமல் போனது எவ்வளவு கேவலமான செயல்.ஒரு தனி மனிதன் போராட்டத்தை இன்னொரு  தனி மனிதன் துணை நிற்காமல் செல்வது ஒரு போரட்டத்தின் சங்கலி அறுபடும் நேரமே. ஆனால் அந்த தியாக போராட்டம் ஒரு நாள் விடிவுபேரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது

காரி  டேவிஸ் நான்கு ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க தனி சிறையில் இருந்து விடுதலை பெற்று நித்தய சைதனிய சந்திக்க இந்தியா வருகிறார் .இந்தியா வந்து பல ஊர்கள் சுற்றி விட்டு  எழிமலையில் இருந்து திரும்பி வரும் பொது தான் ஜெயமோகனை சந்தித்தார். அவரிடம் ஏன் இந்தியாவிற்கு வந்திர்கள் என்ற கேட்ட பொழுது


"ஆனால் இந்த மண்ணில் காலெடுத்து வைத்ததும் நான் உணர்ந்தது இன்னும் பெரிய ஒரு காரணத்தை.நான் சுதந்திரதைக் கண்டுகொண்டேன்.நான் சுதந்திரத்தை விரும்பினேன்.கட்டற்று அலையும் சுதந்திரத்தை.அது இன்று இந்த ஒருநாட்டில் மட்டுமே உள்ளது.

நான் அச்சிரியதுடன்  'அப்படியா?'  என்றேன்? 'அமெரிக்காவில் ? பிரான்ஸில் ?' அவர் சிறித்து 'இல்லை  நண்பனே, அங்கேல்லாம் சுதந்திரம் என்ற கருத்து  மட்டும் சுதந்திரமாக இருந்தால்போதும் என நினைக்கிறார்கள். அவை கண்காணிப்பு மிகுந்த நாடுகள். எங்கும் எப்போதும் கேள்விகள். எல்லா வாசல்களிலும் அடையாள்ளச்சிட்டுகள் தேவை படும்.எங்கே சகமனிதர்கள் நம்மை கண்காணிப்பார்கள் .நல்வழக்கங்களைக் கவனிப்பார்கள் .கொஞ்சம் வழக்கத்தை மிரினால்கூட முகம்சுளிப்பார்கள்.அங்கே மீறல்களுக்கே  ஒரு நல்வழக்க மரபு உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்..'
 அவர் உரக்க சிரித்தார் . 'எளிய மக்கள் . எதையும் அமைப்பாக , ஒழுங்காக, சீராக அமைந்துகொள்ள வேண்டும் என்ற மனப்பழக்கத்தில் இருந்து அவர்களால் இன்னும் விடுபடவில்லை. ஒழுங்கற்றக் கொத்தளிக்கும் இயற்கையின் நிகரற்ற படைப்பூக்கதில் இருந்து அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை ...' என் தோளில் கையை வைத்து  '.இந்த நாட்டில் நான் நுழைந்த முதல்நாள் என் பாஸ்போர்ட்டை ஓர் அதிகாரி பார்த்ததுடன் சரி. இன்றுவரை ஒரு கேள்வி கிடையாது.ஒரு கட்டுப்பாடு கிடையாது. திறந்து  என் முன் போடப்பட்டிருக்கிறது  இந்த நாடு '.

'அப்படியானால் இது பாதுக்காப்பில்லாத நாடு தானே?' என்றேன்.'இல்லை, எந்த ஐரோப்பிய நாட்டை விடவும் இது பாதுகாப்பான நாடு.இங்கே உள்ள குற்றங்களின் எண்ணிக்கை பிரமிபபுட்டுமளவுக்குக் குறைவானது,அவர் சிரித்து கொச்சையான தமிழ் உச்சரிப்பில் 'எவ்வழி நல்லவர்  ஆடவர்  அவ்வழி நல்லை வாழிய நிலனே ' என்றார் .'இது திருக்குறள்  என்று சிரித்தார். இல்லை . இது  வேறு ஒரு பெண்கவிஞர் எழுதியது ஔவையார் .பெண் கவிஞரா ? ஆம் அப்படிதான் சொன்னார்கள் .


நான் இங்கு குறிப்பிட்ட கதைகள் நான் உணர்ந்த சிறு துளியை இங்கு தெளித்துள்ளேன் அது ஒரு கடலின் துளியாகும். நீங்கள் உணர அறம் சிறுகதை தொகுப்பை படித்தால் நீங்கள் பார்க்கும் உலகின் மற்றொரு முகம் தெரியும் . ஒரு புது உலகிற்கு உங்களை அழைத்து செல்லும். மனம் சற்று விரியும். இன்னும் நீங்கள் மேலும் வாழ்க்கையை ரசிப்பிர்கள் அவதானிப்பிர்கள்.


















































































































  

No comments: